சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கடந்த ஆண்டு ஒன்றிய அரசால் வரப்பட்ட நீட் தேர்வுக்கான திருத்த சட்டம், அதன் பிறகு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணை சட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்னிறுத்தி நமது மாணவர்களை வெகுவாக பாதித்து இருக்கின்றார்கள். மாநில அரசு நிதியிலிருந்து மாநில அரசால் தொடங்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் எவ்வாறு அம்மாநில மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில அரசிடமிருந்து பறித்து விட்டது ஒன்றிய அரசு.
இதுமட்டுமின்றி நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்கு வசதி வாய்ப்பு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்க கூடிய பள்ளி கல்வியால் எவ்வித பயனும் இல்லை என்ற நிலைமையை உருவாக்கி, பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக இந்த நீட் தேர்வு உள்ளது. இவ்வாறு மாணவர்களின் கல்விக் கனவை சிதைப்பது மட்டுமில்லை, இந்தியாவின் கூட்டாச்சி தத்துவத்தை சீர்குலைப்பதாகவும் இந்த நீட் அமைந்து விட்டது, இதனை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.
சமூக நீதியை நிலை நாட்டுவதில் நமது நாட்டிற்கே முன்னோடியாக இருக்கின்ற தமிழ்நாட்டின் வரலாற்றையும், திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் புரட்டிப் பார்க்கும் பொழுது, நமது வெற்றிகள் அனைத்தும் நீண்ட நெடிய அரசியல், சட்டம் மற்றும் மக்கள் போராட்டங்களுக்கு பின்னரே கிடைத்து இருக்கின்றது. நாமும், நம் மாநிலமும் அடைந்துள்ள இந்த வளர்ச்சியை பல போராட்டங்கள் மூலமாகத்தான் பெற்றுள்ளோம் என்பதை நான் இந்த அவையில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.