கடந்த 23-ம் தேதி புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 3 பேர் வேதாரண்யம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இலங்கையைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கப்பட்ட அப்பாவி தமிழக மீனவர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 105 மீன்பிடி படகுகளை வருகிற பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11 வரை ஏலம் விடுவதற்கு மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. எனவே இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இந்த விவகாரத்தில் மத்திய அரசு வாய்மூடி இருக்க கூடாது. தமிழக மீனவர்களின் உடமைகளை கொள்ளையடித்தல் மற்றும் சேதப்படுத்துதல், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட செயல்களை தடுக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இந்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.