டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் திடீரென நேற்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகியுள்ளது.
இந்நிலையில் டெல்லி புறநகர் பகுதியில் லட்சக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டு போராடி வருகிறார்கள். அங்கு போராட்டக்களத்தில் இருந்த பஞ்சாப்பை சேர்ந்த லக்விர் சிங்(57) என்ற விவசாயி நேற்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். தற்போது வரை போராட்ட களத்தில் மரணமடைந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. எனினும் ஒரு முடிவு ஏற்படாமல் திரும்பப் போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.