திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தொலைக்காட்சிகள் பெருமளவு வந்த நிலையிலும் ஏழை, எளிய மக்கள் முதலாக பலதரப்பட்ட மக்களும் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு வருகின்றனர். பொதுத் தகவல்கள் அறிவதிலிருந்து, வானொலிகளின் பயன்பாடு மிகவும் சிறப்பானது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்த நிலையில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறையினர்- பிரச்சார் நிறுவனம் தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள வானொலி நிகழ்ச்சி நிலையங்களில் சொந்த நிகழ்ச்சி தயாரிப்புகளை இந்த மாதத்துடன் முடக்க போவதாக வந்த செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் கொடுக்கிறது.
இதனை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்கால பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். எனவே மத்திய அரசின் இந்த தவறான முடிவை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு முடிவை மத்திய அரசு மாற்றிக் கொள்ள மறுத்தால் விவசாயிகள், வானொலிக் கலைஞர்கள், கேட்பாளர்கள் ஆகியோரை திரட்டி போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்” என்று வெளியிட்டுள்ளார்.