நாங்கள் ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு வந்துள்ளதால் ஒரு வருடம் ஆனாலும் போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் அந்த பேச்சு வார்த்தை எந்த ஒரு பதிலையும் எட்டவில்லை. வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் கட்டாயம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கடும் குளிரில் இரவு பகல் பாராமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் பெரும் ஆதரவு பெருகியுள்ளது. ஆனால் மத்திய அரசு என்னவோ அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை.
இந்நிலையில் விவசாய குழுக்களின் தலைவர் கூறுகையில், “நாங்கள் அனைவரும் ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு வந்துள்ளோம். நாங்கள் சாலையிலேயே இருக்க வேண்டும் என அரசு விரும்பினால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வன்முறைப் பாதையில் நாங்கள் பயணிக்க மாட்டோம். விவசாயத்தில் தனியார்துறை எங்களுக்கு தேவை இல்லை. இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கமே லாபம் அடையுமே தவிர, விவசாயிகள் அல்ல” என்று விவசாய குழுக்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.