மத்திய அரசை காரணமாக வைத்து சொத்து வரியை தமிழக அரசு உயர்த்துவதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “திமுக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது பெரும் கண்டனத்துக்குரியது. முந்தைய அரசு 100% விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தியதை கண்டித்து போராட்டம் நடத்தி விட்டு தற்போது 150 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தி உள்ளது எவ்வகையில் ஏற்புடையது. தற்போதைய சொத்து வரி உயர்வு சென்னை போன்ற பெருநகரங்களில் குடியிருக்கும் ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வு நிலையில் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கும்.
மக்கள் எதிர் கொள்ளப்போகும் பொருளாதார நிலையை பற்றி கவலை கொள்ளாமல் போகின்ற போக்கில் மத்திய அரசை காரணம் காட்டி விட்டு தப்பிக்க நினைப்பது திமுக அரசின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. மண்ணையும் மக்களையும் பாதிக்காத வகையில் திட்டங்களை தீட்டி உற்பத்தியை பெருக்கி அதன் மூலம் நிலையான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை . ஆகவே மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மிகக் கடுமையாக இயற்றப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.