தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன், பொதுச்செயலாளர் குமாரவேல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, பத்மபிரியா உட்பட பலரும் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகியுள்ளனர். இதனால் மக்கள் நீதி மைய கட்சியின் ஒட்டுமொத்த கூடாரமே காலியாகிவிட்டது.
இந்நிலையில் அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடந்த சில மாதங்களாகவே மக்கள் நீதி மையத்தில் சர்வாதிகாரம் தலைதூக்கி ஜனநாயகம் இல்லாமல் போய்விட்டது. வெளிப்படைத்தன்மை இல்லை. நமது கட்சி என்று கூறாமல் தனது கட்சி என்று கமல் கூற ஆரம்பித்து விட்டார். சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு காரணம் பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததோடு மட்டுமல்லாமல் அந்தக் கட்சிகளுக்கு 100க்கும் மேற்பட்ட இடங்களை கொடுத்தது தான்.
மக்கள் நீதி மையத்தின் தலைமை சரி இல்லை. சரியான வழியில் கட்சி வழி நடத்தப்படவில்லை. தேர்தலில் தோல்வியை கமலஹாசன் ஏற்காமல் பழியை எங்கள் மீது திருப்பி வைக்கிறார். ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தோல்விக்கு கமலஹாசன் மட்டுமே காரணம்” என்று தெரிவித்துள்ளார்.