மந்தாரகுப்பத்தில் பேருந்து நிலையம் இருந்தும் பேருந்துகள் செல்லாததால் மக்கள் சிரமமடைந்து வருகின்றார்கள்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் இருக்கின்றது. இங்கு என்எல்சி-யில் வேலை பார்க்கும் வெளி மாவட்டங்கள் மற்றும் வேலை மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மந்தாரக்குப்பம் பகுதியில் வசித்து வருகின்றார்கள். மந்தாரக்குப்பத்தில் இருந்து சேலம், திருச்சி, பழனி, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளா, எர்ணாகுளம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
மாவட்டத்தின் தலைநகரான கடலூரை விட மந்தாரக்குப்பத்தில் தான் அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. ஆனால் மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்திற்குள் ஒரு சில பேருந்துகள் மட்டுமே சென்று வருகின்றது. பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையம் முன்பாக கடலூர்-சேலம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டு சென்று விடுகின்றது. இதனால் பேருந்து நிலையம் எப்பொழுதும் வெறிச்சோடி இருக்கின்றது.
பேருந்து நிலையத்திற்குள் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் சாலையோரம் நிறுத்தப்படுவதை பார்த்துவிட்டு ஓடி சென்று ஏறுகின்றார்கள். புதிதாக வருபவர்கள் பேருந்து வரும் என நீண்ட நேரம் பேருந்து நிலையத்திற்குள் காத்திருக்கின்றார்கள். மேலும் மாணவ-மாணவிகளும் பேருந்துகள் உள்ளே வராததால் உரிய நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை. இதற்கு அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட போக்குவரத்து துறை இதை கவனத்தில் கொண்டு அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.