மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாகவுள்ள பார்த்தா சாட்டர்ஜி, சென்ற 2014 -2021 ஆம் வருடம் வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டபோது ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ.க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்த சூழ்நிலையில், இதுகுறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அந்த அடிப்படையில் கொல்கத்தா நாக்தலா பகுதியிலுள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் சென்ற 22ம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணிநேரம் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தினர். மேலும் பார்த்தாவின் உதவியாளர் அர்பிதாமுகர்ஜி வீட்டிலும் சோதனையானது நடந்தது. அப்போது அர்பிதாவின் வீட்டிலிருந்து ரூபாய் 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையது என்று தகவல் வெளியாகியது. அதன்பின் மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கதுறையினர் கடந்த 23ம் தேதி மாலை கைது செய்தனர்.
அத்துடன் மந்திரியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைதுசெய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அர்பிதா முகர்ஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்றும் சோதனை நடந்தது. இச்சோதனையில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 29 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் 10 லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. அதை எண்ணி முடிக்கவே பல மணிநேரம் ஆனது. அதுமட்டுமின்றி வீட்டிலிருந்து 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் தங்கத்தின் மதிப்பு ரூபாய் 4 கோடியாகும். பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் மொத்தபணம் 50 கோடியும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த ஊழலில் கிடைத்த பணம் என்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணம் அனைத்தையும் அர்பிதா, தான் தொடர்புடைய கம்பெனியில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்குரிய பணத்தை ஓரிரு தினங்களில் வீட்டிலிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் அர்பிதா தெரிவித்தார். அதற்குள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்து விட்டனர். இவ்வாறு பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது மந்த்திரி பார்த்தா சாட்டர்ஜிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.