கரூர் மாவட்டத்திலுள்ள மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டும், உடைகள் அணியாமலும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சுற்றி திரிகிறார். தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் யாராவது உணவு கொடுத்தால் முதியவர் அதனை வாங்கி சாப்பிடுவார். இந்நிலையில் ஒரு மர்ம கும்பல் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை சித்தர் எனக்கூறி நாகம்பள்ளி பிரிவு அருகே குடிசை போட்டு அவரை அமர வைத்தனர். மேலும் முதியவருக்கு அருகே அவர்கள் ஒரு உண்டியலை வைத்து பணம் வசூல் செய்ததால் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் முதியவர் அப்பகுதியில் இருக்கும் அரளி செடிக்குள் படுத்து விடுகிறார். ஆனாலும் மர்ம கும்பல் அவரை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து பொதுமக்களுக்கு கொடுத்து ஆசி வழங்க வைத்துள்ளனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி வருவாய் அலுவலர் கவிதா தலைமையில், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் சுதர்சனா, அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை சித்தர் என கூறி பணம் வசூலித்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.