பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
விழுப்புரம் மாவட்டம், செ.குன்னத்தூர் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் என்பவருடைய மகன் சசிகுமார்(28). செ. குன்னத்தூர் மெயின் சாலையில் வசித்து வருபவர் குமார் என்பவருடைய மகன் தர்மராஜ் (21). இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற சற்று மனநிலை சரியில்லாத மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இவர்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உட்பட பல வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் இவர்களுடைய குற்றச்செயல்களை தடுப்பதற்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்துள்ளார்.
இப்பரிந்துரையின் பேரில் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மோகன் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து அவர்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இதற்கான உத்தரவு நகலை அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.