நீலகிரி மாவட்டத்திலுள்ள தேனாடுகம்பை அருகேயுள்ள அணிக்கொரை பகுதியில் கிருஷ்ணகுமார் (43) என்பவர் வசித்து வந்தார். இவர் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஊட்டி நகர் பகுதியில் பல இடங்களில் யாசகமாக கிடைக்கும் உணவு மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார். அவர் நடந்து போகும்போது தனக்குதானே பேசிக்கொண்டே செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சேரிங்கிராஸ் பகுதியில் கிருஷ்ணகுமாரை ஒரு சிலர் தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு கிருஷ்ணகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பின் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் சுபாஷினி, பிலிப் போன்றோர் தலைமையிலான காவல்துறையினர் நேரில் சென்று அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு, இச்சம்பவத்தில் தொடர்புடையதாக ஊட்டியை சேர்ந்த மோசின், ராஜ்குமார், அகிம், இர்சாத் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராஜ்குமாருக்கு இச்சம்பவத்தில் தொடர்பில்லை எனவும் அவரை உடனே விடுதலை செய்யவேண்டும் என்றும் நீலகிரியை சேர்ந்த ஒரு தரப்பினர் ஊட்டி மத்திய காவல் நிலையத்தை நேற்று நள்ளிரவில் முற்றுகையிட்டு காவல்துறையினருடன் நீண்டநேரமாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் இன்று காலையில் இறந்தவரின் உடலை வாங்கமறுத்து அரசு மருத்துவமனையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்டி.ஓ. துரைசாமி, தாசில்தார் ராஜசேகர் தலைமையிலான வருவாய்த்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தை முடிவில் சமாதானமடைந்த அவர்கள் இறந்தவரின் உடலை வாங்கி சென்றனர். இச்சம்பவம் காரணமாக ஊட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட ராஜ்குமாருக்கு இச்சம்பவத்தில் தொடர்பில்லை என்பதால் அவரை விடுதலை செய்யவேண்டும். அத்துடன் மனநிலை பாதிக்கப்பட்டவரை அடித்து கொன்றது ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊட்டி ஏ.டி.சி. அருகே இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.