மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலமாதவன் தலைமையில் நிர்வாகிகள் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள தாளக்குடி, மாதவப்பெருமாள் கோயில் ஆகிய இரண்டு இடங்களில் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த குவாரி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய வழிமுறைகளுடன் திறக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
புதிய வழிமுறையின் படி மாட்டு வண்டியில் எந்திரம் மூலம் மணலை அள்ளுவதால் வண்டிக்கும், மாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே எந்திரம் மூலம் மணல் அள்ளாமல் பழைய முறைப்படி மனித ஆற்றல் மூலம் மணல் அள்ளுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். மாட்டு வண்டிக்கு நிர்ணயம் செய்து இருக்கும் மணலுக்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே அதனை குறைத்து பழைய முறைக்கே கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.