கிரேக்கத்தில் அகதிகள் அங்குள்ள கடலோர காவல்படையினரால் உயிருடன் கொளுத்தப்படுவதாக துருக்கி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கிரேக்கத்தில் உள்ள அகதிகளுக்கு அங்குள்ள கடலோர காவல்படையினரால் அநீதிகளும், கொடுமைகளும் இழைக்கப்படுவதாக பல தொண்டு நிறுவனங்கள் புகார் அளித்து வருகிறது. இந்நிலையில் அதனை நிரூபிக்கும் விதமாக வீடியோ ஆதாரம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட துருக்கியின் உள்விவகார அமைச்சர் Suleyman Soylu, கிரேக்கத்தில் அகதிகள் உயிருடன் கொளுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தார். மேலும் கிரேக்கத்தில் அகதிகளுக்கு எதிராக நடக்கும் இந்த அநீதிகளை ஐரோப்பிய ஒன்றியம் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் துருக்கியின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த நார்வே மனித உரிமைகள் அமைப்பின் Tommy Olson, அகதிகளை கொளுத்திய சம்பவம் உண்மையிலேயே நடந்ததா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அதேபோல் துருக்கியின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த தொண்டு நிறுவனம் கிரேக்கத்தில் அகதிகள் மோசமாக நடத்தப்பட்டிருக்கலாம், ஆனால் அவர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டார்களா என்பது சந்தேகம் தான் என்று கூறியுள்ளது. மேலும் கிரேக்கத்தின் மீது துருக்கி பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம் என்று கிரேக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.