திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ஆம் ஆண்டு தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடை அள்ளும்போதும், மனித கழிவுகளை அகற்றும் போதும் உயிரிழந்ததால் மனித கழிவுகளை அகற்றுதல் மற்றும் பாதாள சாக்கடை அள்ளுதல் போன்ற பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
அதோடு பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரம் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போதும் மனித கழிவுகளை மனிதனே அள்ளுதல் மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்தல் போன்றவைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு சில புகைப் படங்களையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.
இதை பார்த்த நீதிபதிகள் மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது வேதனையாக இருக்கிறது என்று வருத்தம் தெரிவித்தனர். அதோடு மனுதாரர் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் பணியிட நீக்கம் செய்யப்படுவார் என்று கூறினார். ஒருவேளை மனுவில் உண்மை இல்லாத பட்சத்தில் மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர். மேலும் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.