எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கிருமிநாசினி தெளித்தது மனித உரிமை மீறல் என தேசிய மீனவர் பேரவை கண்டனம் தெரிவித்து வந்தனர். ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 68 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு, எழுவைதீவு உள்ளிட்ட கடற்பகுதியில் வைத்து மீனவர்களை கைது செய்து விசாரணைக்காக மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் மற்றும், தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பின் மீனவர்கள் உடல் முழுமையாக கிருமிநாசினி தெளித்த பின்னரே, கடற்படை முகாமிலிருந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க படுகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்தது மனிதநேயமற்ற செயல் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மீனவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனையை மேற்கொண்டிருக்கலாம் என்றும், கைது செய்யும் மீனவர்களை இலங்கை அரசு கண்ணியம் மனிதாபிமானத்துடன் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், 68 மீனவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.