ஐ.நா. அமைப்பின் வளர்ச்சி திட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், சமீபத்திய மனித வளர்ச்சி தரவரிசை பட்டியலில் 192 நாடுகளில் பாகிஸ்தான் நாடு, 7 இடங்கள் பின்தங்கி 161-வது இடத்திற்கு சென்றுள்ளது என தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 189 நாடுகளில் பாகிஸ்தான் நாடு 154-வது இடத்தில் இருந்தது. சமீபத்திய அறிக்கையின்படி, அந்நாட்டில் வாழும் நபர்களின் ஆயுட்காலம் சராசரியாக 66.1 ஆண்டுகள் என்றும் குழந்தைகளை அவர்களது 8 வயதில் பள்ளிக்கு சேர்க்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் மீது வெவ்வேறு பருவகால அதிர்ச்சிகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன என்றும் இதனால், கடந்த காலத்தில் நாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது பின்னோக்கி செல்கின்றது என்றும் அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகில் பருவகால அதிர்ச்சிக்கான எடுத்துக்காட்டாக பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காணப்படுகின்றது என்றும் அதனை வகைப்படுத்தியுள்ளது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட 9 தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் (180-வது இடம்) ஆகிய இரு நாடுகளே மனித வளர்ச்சியில் மிக பின்தங்கிய நிலையில் உள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.