பணியாளர்கள் அரசு மருத்துவ கல்லூரி டீனின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா காலகட்டத்தில் 121 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை திடீரென பணியில் இருந்து நிறுத்திவிட்டனர். இந்நிலையில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவ கல்லூரி டீன், மருத்துவ பணிகள் இயக்குனரகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அலுவலகங்களில் பணியாளர்கள் மனு அளித்துள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு வேலை வழங்கப்படாததால் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் புறப்பட்டு சென்ற அரசு மருத்துவ கல்லூரி டீன் விஜயகுமாரை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தங்களுக்கு மீண்டும் பணி வழங்கி 2 மாத சம்பள பாக்கி மற்றும் 3 மாத ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.