குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் ஒரு வாரங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபம் அடைந்த பொதுமக்கள் மங்கலம்- அவலூர்பேட்டை சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.