சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கிராம மக்கள் சுவரொட்டி அடித்து கருப்புக் கொடி ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்குச்சாவடி மையம் காமுபிள்ளைசத்திரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுக்குலாபுரம், புதுச்சத்திரம், காமுபிள்ளைசத்திரம், புதுக்காமன்பட்டி ஆகிய கிராமங்களிலிருந்து வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வந்தனர். இந்த சட்டமன்ற தேர்தலில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காமுபிள்ளைசத்திரம் கிராமம் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இதையடுத்து அந்த கிராம மக்கள் திடீரென எஸ்.புதுக்கோட்டைக்கு சென்று வாக்களிக்க மாட்டோம் என்று நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். அதற்கு அவர் அடுத்த தேர்தலில் மாற்றம் செய்யலாம் இந்த தேர்தலில் வாக்குச்சாவடியை மாற்ற செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த கிராம மக்கள் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், காமுபிள்ளைத்திரத்தில் வாக்கு சாவடி அமைக்க வேண்டும் என்றும் சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளனர். மேலும் கருப்புக் கொடியை அந்த சுவரொட்டி அருகே ஏற்றி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.