மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள வேட்டமங்கலம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான பவித்ராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பிரேம்குமார் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் சோளகாளிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பிரேம்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரேம்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரேம்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.