நைஜீரிய பெண்ணிற்கும் அவரது குழந்தைகளுக்கும் நீல நிறத்தில் கண்கள் அமைந்ததால் அவருடைய கணவர் பிரிந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நைஜீரியாவை சேர்ந்த பெண் ரிஷிகாட் என்பவருக்கு அழகிய நீல நிற கண்கள் இருந்தன. அதேபோல் அவருடைய குழந்தைகளுக்கும் அமைந்திருந்தன. குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுக்கு நீல நிறத்தில் கண்கள் இருந்தால் ரிஷிகாட்டின் கணவர் குழந்தை மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்ற செய்தி ஆப்பிரிக்க மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இயற்கையிலேயே இத்தகைய கண்ணமைப்புடன் பிறந்த ரிஷிகாட் மற்றும் அவருடைய குழந்தைகளை பார்க்கும் பொழுதெல்லாம் அவருடைய கணவர் வித்தியாசமாக நடக்கத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய ரிஷிகாட், “என்னுடைய குடும்பத்தில் எனக்கு மட்டுமே நீல நிறத்தில் கண்கள் உள்ளது. இதை ஒரு குறைபாடாக கருதி நான் மருத்துவமனைக்கு சென்றதில்லை. அப்துல்வாய்சூ ஓமோ டாடா என்பவரை திருமணம் செய்து கொண்ட நாள் முதல் கண்களின் நிறத்தை காரணம் காட்டி பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் நீல நிற கண்கள் இருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
முதல் குழந்தை பிறக்கும் பொழுதே அவருடைய மாற்றத்தை நான் உணர்ந்து கொண்டேன். அதன்பின் அவரால் கைவிடப்பட்டு, குழந்தைகளை மகிழ்ச்சியாக வளர்ப்பதற்காக என்னுடைய பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டேன்” என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். கண்கள் நீல நிறத்தில் இருப்பதால் மட்டுமே கைவிடப்பட்ட ரிஷிகாட் பற்றி லகோஸ் நகரை சேர்ந்த ஆலபி ருக்காயத் என்ற கல்லூரி மாணவர் ஒருவர் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை பதிவிட, தற்போது உலகம் முழுவதும் வைரல் ஆகி விட்டது.