மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை வாலிபர் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மரியநாதபுரம் பகுதியில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக் ராஜாவை விட்டு பிரிந்து சென்றனர். இந்நிலையில் வேடப்பட்டி மயானம் அருகில் கார்த்திக்ராஜா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் விரைந்து சென்று கார்த்திக் ராஜாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக் ராஜாவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சக்திவேல் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கார்த்திக் ராதா சக்திவேலின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் இருவரும் ஒன்றாக மது குடிக்கலாம் என கூறி சக்திவேல் கார்த்திக் ராஜாவை வேடப்பட்டி மயானம் அருகில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு தான் மறைத்து வைத்திருந்த கயிற்றால் கார்த்திக் ராஜாவின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.