ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை எந்திரத்தின் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கும் ஜெயஸ்ரீ என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் 2 பேரும் குடும்பத் தகராறு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஜெயஸ்ரீக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சந்திரசேகரன் ரூபாய் 30,000 பணம் கொடுத்துள்ளார். இதில் ஜெயஸ்ரீ 10,000 ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டியிருந்தது. இந்த பணத்தை சந்திரசேகரன் ஜெயஸ்ரீ இடம் கேட்டுள்ளார்.
அதற்கு ஜெயஸ்ரீ மெர்சியஸ் என்பவரிடம் பணம் பற்றி பேசி கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சந்திரசேகரன் மெர்சியஸிடம் பணத்தை கேட்ட போது 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மெர்சியஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சேர்ந்து சந்திரசேகரனை சுத்தியலால் கொடூரமான முறையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மெர்சியஸ், கிளிண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வினித்விஜய் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.