சிகிச்சைக்காக மனைவியை 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு ரிக்ஷாவில் அழைத்துச் சென்ற கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஒடிசா மாநிலத்தில் இருக்கும் பூரி மாவட்டத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனது மனைவியை 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு தட்டு ரிக்ஷாவில் அழைத்துச் சென்றுள்ளார். பூரி மாவட்டத்தில் இருக்கும் சுகந்தி மருத்துவமனையில் முதியவரின் மனைவி கபீர் பாய் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் கட்டாக் நகரில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
கட்டாக் செல்வதற்கு முதியவரால் வாடகைக்கு ஆட்டோ எடுக்க முடியவில்லை இதனால் தட்டு ரிக்ஷாவை எடுத்துக் கொண்டு தனது மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். சுமார் 90 கிலோமீட்டர் வந்த அவர்களை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கபீர் பாயை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு உதவி செய்துள்ளனர். இதுகுறித்து முதியவர் கூறுகையில் “ஆட்டோ ரிக்ஷா ஒன்றை வாடகைக்கு எடுக்க முயற்சித்தபோது ரூபாய். 1,200 கேட்டனர்.
என்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை அதனால் வேறு வழி இல்லாமல் தட்டு ரிக்ஷா உதவியுடன் எனது மனைவியை அழைத்து வந்தேன். ஒரு வருடமாக சுகந்தி மருத்துவமனையினால் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றேன். இந்த முறை என் மனைவிக்காக நான் மேற்கொண்ட பயணம் மிகவும் வலி நிறைந்தது. களைப்பும் இருந்தது. ஆனாலும் என் மனைவிக்கு சிறந்த மருத்துவம் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார். இத்தம்பதியின் நிலையை உணர்ந்த எஸ்சிபி மருத்துவமனை அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முடிவு செய்தது.