சந்தேக புத்தியால் மனைவியையும் மாமியாரையும் மாற்றுத்திறனாளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் சலங்குகார தெருவை சேர்ந்த தம்பதிகள் ரவி – பூங்கொடி. இவர்களது மகள் மீனா. இவருக்கும் சேலம் குப்பத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான நம்புராஜ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் நம்புராஜ் – மீனா தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நம்புராஜிக்கு தனது மனைவிக்கும் வேறு நபருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் மீனா தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே ஒரு வருடம் ஆகியும் மீனா வீட்டிற்கு வராததால் நம்புராஜ் அவரின் மாமியார் வீட்டிற்கு சென்று அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மீனாவின் குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனாவும், பூங்கோடியும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக குழந்தையை தூக்கிக்கொண்டு நடந்துள்ளனர்.
அச்சமயத்தில் நம்புராஜ் அவர்கள் இருவரையும் வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதனால் பூங்கோடி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த நம்புராஜ் தன மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பூங்கோடியை தாக்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மீனா அதை தடுக்க முயன்ற போது அவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு நம்பிராஜ் தப்பியோடியுள்ளார்.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் தப்பி ஓடிய நம்பிராஜின் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.