மனைவியின் வளைகாப்பு அன்று கணவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு பிரியா என்ற பெண்ணுடன் ராகுலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் தரைமட்ட கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தோட்டத்திற்கு பாய்ச்சுவதற்காக ராகுல் மோட்டார் சுவிட்சை போட முயன்றுள்ளார். அப்போது ராகுல் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ராகுலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாவிற்கு வளைகாப்பு நடத்த வேண்டிய நாளில் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.