இரண்டு வாலிபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் ஓ.சி.ப் மைதானத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் 2 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் படுகொலைசெய்யப்பட்ட வாலிபர்கள் மசூதி தெருவில் வசிக்கும் அசாருதீன் மற்றும் அவரது நண்பர் ஆட்டோ டிரைவரான சுந்தர் என்பது தெரியவந்துள்ளது. இதில் அசாருதீன் ஆவடி மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
அதாவது கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான மணிகண்டன் என்பவரும், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு வெவ்வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். அப்போது இருவரும் நண்பர்களாகிவிட்டனர். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு இருவரும் இணைந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஜெகன் அடிக்கடி மணிகண்டன் வீட்டிற்கு சென்று வந்தபோது மணிகண்டனின் மனைவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மணிகண்டன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜெகன் தனது நண்பர்களுடன் ஆவடி பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கோபமடைந்த மணிகண்டன் ஜெகனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெகன் தனது நண்பர்களான அசாருதீன், சுந்தர் உள்பட சிலருடன் ஓ. சி. எப் மைதானத்தில் வைத்து மது அருந்தியுள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெகனை கொலை செய்வதற்காக அங்கு சென்றுள்ளார். அவர்களிடமிருந்து ஜெகன் தப்பி ஓடிவிட்டார். இதனால் அசாருதீன் மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் மணிவண்ணனின் கூட்டாளிகள் சுற்றிவளைத்து சரமாரியாக விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.