புதைக்கப்பட்ட தொழிலாளியின் உடல் காவல்துறையினரால்தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பாண்டியன் நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பாண்டியன் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பாண்டியன் வேலைக்கு சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் நினைத்திருந்தனர். இருப்பினும் 20 நாள்கள் ஆகியும் பாண்டியன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கடந்த அக்டோபர் மாதம் திருநாவலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் பாண்டியனின் நண்பர் வேல்முருகன் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகத்தின் பேரில் வேல்முருகனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது வேல்முருகன் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவிக்கும், பாண்டியனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருக்கும் என வேல்முருகன் சந்தேகம் அடைந்துள்ளார். இதன் காரணமாக வேல்முருகன் கொடூரமான முறையில் பாண்டியனை கொலை செய்து வயல்வெளியில் குழி தோண்டி புதைத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பாண்டியன் புதைக்கப்பட்டதாக கூறிய இடத்திலிருந்து அவரது சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.