கத்தியை காட்டி மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலித்தொழிலாளி உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள ராஜதானி காமாட்சிபுரத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த யாழினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு யாழினி குழந்தையை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து வேல்முருகனும் அவரது மாமனார் வீட்டிற்கு சென்று யாழினியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று வேல்முருகன், அவரது நண்பர் ஆகாஷ் ஆகிய இருவரும் கருவேல்நாயக்கன்பட்ட க்கு சென்று யாழினியின் தந்தையான கனியை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கனி தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன் மற்றும் ஆகாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.