மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள அரண்வாயல் குப்பத்தில் வசித்து வருபவர் நாகேந்திரன். இவரின் மனைவி பத்மா. மகள்கள் இரண்டு பேர் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை விட்டு பத்மா பிரிந்து சென்றார். இதைத்தொடர்ந்து நாகேந்திரன் சென்ற 2015-ம் வருடம் ஆவடி ரெட்டிபாளையம் சின்னம்மன் கோவில் தெருவில் இருக்கும் பத்மாவின் வீட்டிற்குச் சென்று குடும்பம் நடத்துமாறு அழைத்து இருக்கின்றார்.
ஆனால் அவர் மறுத்ததால் வீட்டின் பின்புறம் நின்று கொண்டு பத்மாவை அழைத்திருக்கின்றார். அவர் வந்தவுடன் இருக்கமாக பிடித்துக் கொண்டு பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து நாகேந்திரனை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.