பிரித்தானியா நாட்டில் திருமணநாள் இரவில் தன் மனைவியைக் கொன்று அவரது உடலை சூட்கேஸில் அடைத்த நபருக்கு குறைந்தபட்சம் 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, தாமஸ் நட் (46) சென்ற வருடம் அக்டோபர் 27ம் தேதி டான் வாக்கரை (52) திருமணம் செய்து கொண்டார். அன்றிரவே அவர் தன் மனைவியை கொலை செய்துள்ளார். இச்சம்பவம் லைட்கிளிஃப்பின் ஷெர்லி குரோவிலுள்ள வீட்டில் நடந்தது. இதையடுத்து தனது மனைவி காணாமல் போனதாக நட் கடந்த வருடம் அக்டோபர் 31ம் தேதி காவல்துறையினரை அணுகியுள்ளார்.
அதன்பின் காவல்துறையினர் அந்த பெண்ணை தேடிய நிலையில், 4 நாட்களுக்குப் பின் அவரது உடல் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டு தம்பதியரின் மேற்கு யார்க்ஷயர் வீட்டிற்குப் பின்னால் உள்ள புதர்களில் வீசப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து விசாரணையில் தாமஸ் நட் தான் தன் மனைவியை கொலை செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் தாமஸ் நட் ஒரு சூட்கேஸை வெளியே இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அக்காட்சியில் அவர் சூட்கேஸ் இழுத்துச்சென்ற அடையாளத்தை அழிப்பதும் பதிவாகி இருக்கிறது. அதன்பின் விசாரணையில், தாமஸ் நட் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதுகுறித்து தாமஸ் நட் கூறியதாவது “கொலை செய்யும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. அவளை அடித்தபோது இறந்துவிட்டதாக கூறியுள்ளார். பின் வாக்கரின் உடலை அப்புறப்படுத்த முயற்சிக்கும் முன் ஒரு அலமாரியில் சேமித்து வைத்திருந்ததாக” நட் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் தாமஸ் நட்டுக்கு குறைந்தபட்சம் 21 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.