மனைவியை கொன்று விட்டு கணவர் நர்சிங் மாணவியுடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புது பூங்குளம் பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகன ஓட்டுனர் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கோயிலுக்கு தன் குடும்பத்துடன் சென்ற சத்தியமூர்த்தி அங்கு திவ்யாவை கொலை செய்து விட்டு மகளுடன் தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று திவ்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குகாக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதற்கு முன்பாக சத்தியமூர்த்தி தனக்கு கூல்டிரிங்ஸில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து பின் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக திவ்யா வாக்குமுலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சத்தியமூர்த்தியை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து சத்தியமூர்த்தி தனது குடும்பத்தினருக்கு ஒரு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். அதில் தனக்கு சிறுநீரக பாதிப்பு அதிகமாகி விட்டதால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. எனவே தனது காதல் மனைவியை பிரிந்து வாழ முடியாததால், அவருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தினேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் அரசு அதிகாரி ஒருவர் நர்சிங் படிக்கும் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காணாமல் போன அந்த மாணவி திவ்யாவின் நெருங்கிய உறவினர் என்பதும், சத்தியமூர்த்தி அந்த மாணவியுடன் தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.