வேலூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனியார் பள்ளி ஒன்றில் மேலாளராக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவர் நேற்று மாலை தனது நண்பர் சந்தோஷ் குமார் காரில் காட்பாடியிலிருந்து ஓட்டேரியில் தனது தாயார் வீட்டில் இருக்கும் மனைவியை பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது நேஷனல் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் பழுது ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு பாலகிருஷ்ணன் பைபாஸ் சாலையில் இருக்கின்ற மெக்கானிக் கடை காரை பழுது பார்க்க நிறுத்தியுள்ளார். காரை பரிசோதனை செய்வதற்காக மெக்கானிக் அந்த காரை ஓட்டிச் சென்றுள்ளார். பாலகிருஷ்ணன் உடன் சென்றுள்ளார். புதிய மீன் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது.
அதனால் மெக்கானிக்கு உடனடியாக நிறுத்தி முன்பகுதியை திறந்து பார்த்தார். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்த பாலகிருஷ்ணன் மிக விரைவாக வெளியேறினார். சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். தண்ணீரை வேகமாக பீச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து போய்விட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.