மனைவியை விட்டு பிரிந்ததால் மனமுடைந்த என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி அருகே உள்ள கே.ஜி.போஸ் நகரில் தினேஷ் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜினீயரான இவருக்கு தீபா என்ற மனைவியும், தன்யா ஸ்ரீ என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் பாலுவுக்கு தொழிலில் போதிய அளவு வருமானம் கிடைக்காததால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீபா கோபித்துகொண்டு குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த தினேஷ்பாலு அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக தினேஷ்பாலுவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தினேஷ்பாலு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நாமக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.