தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதிகாரப்பட்டியில் கூலித் தொழிலாளியான ராஜா(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜா நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்து ராஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை பிரிந்த விரக்தியில் ராஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.