கணவரால் விரட்டப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மின் மயானம் அருகில் தனியாக சுற்றித்திரிந்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த பெண் வேறு மொழியில் பேசியதால் காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் காவல்துறையினர் சமூக நலத்துறையின் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சகி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் காவல்நிலையத்திற்கு வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அதன்பின் ஒடியா மொழி தெரிந்த ஒரு நபரை வரவழைத்து அந்த பெண்ணிடம் பேச வைத்த போது அவரது பெயர் பவுனிமா என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பவுனிமா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ரயிலில் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். அதன் பிறகு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் குழந்தையை வாங்கிக்கொண்டு பவுனிமாவின் கணவர் அவரை விரட்டி விட்டுள்ளார். இதனால் எங்கு போவது என்று தெரியாமல் பவுனிமா 3 நாட்களாக சாலையில் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பவுனிமாவின் கணவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.