இரண்டு பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கொத்தனார் மீது மனைவி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் கலெக்டர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அதில் முதியோர் உதவித்தொகை கேட்டு 83 மனுக்கள், பட்டா தொடர்பாக 143 மனுக்கள், வேலைவாய்ப்பு தொடர்பாக 48 மனுக்கள், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கேட்டு 55 மனுக்கள், காவல் துறை தொடர்பாக 36 மனுக்கள் மற்றும் இதர மக்கள் 39 மனுக்கள் என மொத்தம் 404 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதன்பின் அந்த மனுக்களை ஆராய்ந்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அப்போது ஒரு பெண் இரண்டு மகள்களுடன் கூடுதல் கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு கலெக்டர் அலுவலகம் வாசலில் கண்ணீர் மல்க உட்கார்ந்து இருந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் சேத்தியாத்தோப்பு அருகில் பெரவரப்பூரில் வசித்த 25 வயதுடைய தமிழரசி என்பதும், இவரும் காட்டுமன்னார்கோவில் அருகில் குருவாடியில் வசித்த கொத்தனார் ராஜீவ்காந்தியும் காதலித்து கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.
தற்சமயம் அவர்களுக்கு 3 1/2 வயதில் யுவ ஸ்ரீ, 4 மாத குழந்தை தனு ஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். இதனை அடுத்து அவர் கணவர் சம்மத்துடன் குடும்ப அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால் கணவருக்கு தெரியாமல் எப்படி குடும்ப அறுவை சிகிச்சை செய்வாய் என்று அவர், மாமனார், மாமியார், ஆகிய 3 பேரும் தமிழரசி வீட்டைவிட்டு துரத்தி விட்டார்கள். இதனால் தன்னுடைய கணவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். இதனை எடுத்து அவரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.