மனைவி இறந்த 20-வது நாளில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டப்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான சிவகுமார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி(38) என்ற மனைவி இருந்துள்ளார், கடந்த மாதம் 26-ஆம் தேதி சிவகாமி மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து நண்பர் ஒருவருடன் மொபட்டில் சிவகாமி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த மற்றொரு மொபட் சிவகாமியின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சிவகாமி பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்த துக்கத்தில் இருந்த சிவக்குமாருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவகுமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்த 20-வது நாளில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.