திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிபாளையம் பகுதியில் விஸ்வநாதன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயது உடைய லாவண்யா என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் கொண்டு விடும்படி சந்தியா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் விஸ்வநாதன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி லட்சுமி நகர் அருகே சென்ற போது கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் விஸ்வநாதன் காவிரி ஆற்று பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திடீரென காவிரி ஆற்றில் குதித்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தியா சத்தம் போட்டதால் வாகன ஓட்டிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் விஸ்வநாதனை கண்டுபிடிக்க இயலவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.