மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புஷ்பா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நாகராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் திருநாவலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.