சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவர் வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜீவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். மகாராஜாவின் மனைவி ஜீவா தற்போது கர்ப்பமாக உள்ளார். திருவான்மியூரில் பிரபல ரவுடி ஓலை சரவணன் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு மகாராஜா சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அந்த சமயம் ஜீவா தனது கணவன் வீட்டுக்கு வராததால் போன் செய்து தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
பிறகு ஒரு வழியாக மகாராஜா வீட்டிற்கு வர கணவன் மனைவி இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ஜீவா கணவனை மிரட்டும் வகையில் மின்விசிறியில் கயிறு கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதை பார்த்த மகாராஜா தனது மனைவியை மீட்டு சமாதானம் செய்தார். ஆனால் ஜீவா சமாதானம் அடையவில்லை என்று கூறப்படுகிறது. உடனே காவலர் மகாராஜா நீ மட்டும் தான் தற்கொலை செய்து கொள்வாயா நானே செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு மனைவி கட்டி வைத்திருந்த தூக்கு கயிற்றை விளையாட்டாக தன் கழுத்தில் மாட்ட திடீரென்று மகாராஜா கழுத்தில் கயிறு இறுக தொடங்கியது. இதனால் காவலர் மகாராஜா வலியில் துடித்தார். பிறகு அருகில் இருந்தவர்கள் அவரை மீது தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகும் மகாராஜா தற்போது நலமாக உள்ளார்.