கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பிள்ளையார் கோவில் வீதியில் காந்தரூபன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தீஷ்னாதேவி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த பல மாதங்களாக கோவை ராமநாதபுரம் பகுதியில் வசித்து வந்த காந்தரூபன் தனது குடும்பத்துடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சூலூருக்கு குடியேறியுள்ளார். ராமநாதபுரத்தில் வசித்த போது காந்தரூபன் ஏல சீட்டு நடத்தி வந்ததோடு, சீட்டு பணத்தை வட்டிக்கு பெற்றுள்ளார். அவர் வட்டிக்கு கொடுத்த பணம் திரும்பி வராததால் சீட்டு கட்டி அவர்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் காந்தரூபன் தனது குடும்பத்துடன் நேற்று அதிகாலை விஷம் குடித்தார்.
நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, பழனியம்மாளும், தீஷ்னாதேவியும் இறந்த கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காந்தரூபனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனியம்மாள் மற்றும் தீஷ்னாதேவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.