ஆப்கானிஸ்தானில் மனைவியின் மீது சந்தேகம் அடைந்த கணவர் அவர் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் ஆப்கானிஸ்தானில் 87% பெண்கள் உடல் ரீதியான துன்பங்கள் அல்லது பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். அது தவிர மனதளவிலும் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை அமைப்பு நடத்திய தேசிய கணக்கெடுப்பில் அறியப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கணவரோ அல்லது குடும்பத்தில் இருக்கின்ற வேறு ஆண்கள் மூலமாக பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் காபூலில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சார்கா. இவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். படிப்பறிவு இல்லாத இவருக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றது. அவருக்கு ஆறு வயதுடைய ஒரு மகன் உள்ளான். இவரின் கணவர் தினமும் அவரை அடித்து மிகவும் கொடுமைப்படுத்துவார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சர்காவின் மீது சந்தேகம் கொண்ட அவரின் கணவர், கத்தியின் மூலமாக சார்காவின் மூக்கை அறுத்திருக்கிறார். அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக காபூல் அழைத்து வருவதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள் மிகவும் போராடி இருக்கின்றனர்.
அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இதுபற்றி சார்கா கூறுகையில், “நான் என் கணவரிடம் சொல்லாமல் என் தாய் தந்தை வீட்டிற்கு சென்றது அவருக்கு மிகவும் அவமானமாகி விட்டது. என்னை ஒரு தோட்டத்திற்கு கூட்டிச்சென்று, ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய் என்று கேட்டு அடித்தார். அவர் துப்பாக்கியும் வைத்திருந்தார்.திடீரென அவர் என் சட்டைப் பையில் இருந்து ஒரு கத்தியை எடுத்து அதன் மூலமாக என் மூக்கை அறுத்து விட்டார். ரத்தம் கொட்டியது. இருந்தாலும் அவர் என்னை அங்கேயே தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.