மனைவியை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி வேலூர் வடக்கு காவல் நிலையம் முன் வாலிபர் கையை அறுத்துக் கொண்டார்.
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் 30 வயதுள்ள ஒரு வாலிபர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அதன்பின் அவர் வடக்கு காவல் நிலையம் வந்து திடீரென்று எதிர்பாராத விதமாக தனது கையை அறுத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர். அதன் பின் அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வந்த உசேன் என்பதும் மது போதையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதன்பின்னர் உசேன் காவல்துறையினரிடம் கூறியதாவது, எனக்கு கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது .சில மாதங்களுக்கு முன் எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், நான் குடும்ப நடத்த அழைத்தும் அவர் வர மறுத்து விட்டார். மேலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை தாக்க முயற்சி செய்கிறார்கள். எனவே எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி வேலூர் பென்ட்லேன்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.