மன்னார்குடி விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள தொகுதியாகும். ஏராளமான சிவாலயங்கள் உள்ள இப்பகுதியில் வைணவக் கோயிலான ராஜகோபாலசுவாமி திருக்கோவில் உள்ளது. தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் இணைந்து சம உரிமை மாநாடு நடத்தியது மன்னார்குடியில் தான். மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 3 முறை வென்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளது.
மன்னார்குடி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,58,433 ஆகும். மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். பறவைகள் சரணாலயமாக விளங்கும் வடுவூர் ஏரியை சுற்றுலாத்தலமாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ள மன்னார்குடி தொகுதியில் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். மன்னார்குடி-பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றும், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு கொண்டு வந்த வடுகூர் விளையாட்டு அரங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.