சிறு வயதில் தான் சந்தித்த ஒரு சம்பவத்தால் மனஅழுத்தத்துக்கு ஆளான ஒரு பெண்ணின் மன நிலையையும், ஒரு சிறுமியின் இறப்புக்கு நாம் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் அழுத்தப்பட்ட இன்னொரு பாத்திரத்தின் மனப் பிறழ்வையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதைக்களம் பற்றி தெரிந்துகொள்வோம். ரீனா என்ற பிரதான பாத்திரத்தின் முதல் எழுத்தாக படத்துக்கு “ரீ” என்று பெயர் வைத்திருக்கின்றனர். ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் உளவியல் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் மனோதத்துவ டாக்டர் முகில் ஆவார். அவரது மனைவி ரீனா ஆவார். இளம் தம்பதிகளான இரண்டு பேரும் புதியதாக ஒரு வீடு வாங்கி, குடிபோகின்றனர்.
பக்கத்து வீட்டில் ஏதோ பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக டாக்டர் கணவரிடம் ரீனா தினசரி புகார் கூறிகொண்டே இருக்கிறார். ஆனால் அது ஒரு மாயையாக இருக்கலாம், வீண் கற்பனையே தவிர நிஜமல்ல என டாக்டர் எவ்வளவோ கூறி பார்க்கிறார். எனினும் மனைவியோ அதனை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார். இதனிடையில் கணவர் நம்பாதவராக இருக்கிறார். 2 பேரும் தங்களது நிலையில் பிடிவாதமாக இருக்கின்றனர். ஒருக் கட்டத்தில் மனைவி முறையீட்டுக்குச் செவி கொடுக்கிற டாக்டர் முகில், களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்கிறார்.
அப்போது பக்கத்து வீட்டில் பிரச்சினை உள்ளது தெரிகிறது. அங்கு குடியிருக்கும் மற்றொரு டாக்டர் சாகுல் வீட்டில் இருந்து தான் அலறல் சாதம் கேட்கிறது. இதையடுத்து முகில் மெல்ல அந்த வீட்டிற்குள் நுழைந்து விசாரிக்கிறார். அங்கே டாக்டர் சாகுல் பெரும் மனப் பிறழ்வுக்கு ஆளாகி இருப்பது தெரிகிறது. அவரிடம் நெருங்க நெருங்க அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கிறது. தான் செய்த அறுவை சிகிச்சையால் மரணமடைந்த தன் மகளை வீட்டுக்குள் பிணமாகப் பெட்டிக்குள் வைத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து முகிலுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. குற்ற உணர்ச்சிக்கு ஆளான மனசு, ஜான்சன் என்ற இன்னொரு பாத்திரமாக உருவெடுத்து அவரை கொடுமைப்படுத்துவதாகக் கண்டுபிடிக்கிறார்.
அவருக்குள் மறைந்திருந்த அந்தப் பழி வாங்கும் பாத்திரத்தை சிகிச்சை வாயிலாக வெளிக் கொண்டு வந்து சாகுலை எப்படி முகில் மீட்கிறார் என்பது தான் கதை ஆகும். இந்த திரைப்படத்தில் மனோதத்துவ நிபுணர் ஆக பிரசாந்த் சீனிவாசன் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி ஆக காயத்ரிரமா நடித்துள்ளார். பயந்து அலறும் முகபாவனைகளை தெளிவாக காட்டியுள்ளார். அடுத்து டாக்டர் சாகுலாக பிரசாத் வருகிறார். பார்க்க சாதுவாக இருப்பதும் இறந்துபோன தனது மகளின் நினைவுவந்ததும் மனப்பிறழ்வு காட்டும் மன நோயாளியாக மாறுவதும் நடிப்புக்கு நல்ல வாய்ப்பு. டாக்டர் சாகுலிடமிருந்து குற்ற உணர்ச்சியாக வெளிப்படும் ஜான்சன் பாத்திரத்தில் இயக்குனர் சுந்தர வடிவேல் நடித்து இருக்கிறார்.
தண்டனை, தண்டனை என்று வீரா வேசத்துடன் கூறிக் கொண்டு பழிவாங்கத் துடிக்கிற அந்த பாத்திரத்தில் அசல் மன நோயாளியாகவே தெரிகிறார். படத்தின் முதல்பாதி வழக்கம்போல் காதல், பாடல்கள் என்று நகர்கிறது. அழுத்தமான காட்சிகள் இன்றி அலுப்பூட்டுகிறது இரண்டாம் பாதி. இதற்கிடையில் திடீர் திருப்பங்கள் வருகிறது. பேய் படமா? அல்லது சைக்கோ படமா என்பதற்கு பதில் கிடைக்கிறது. யாருக்கு என்ன பிரச்சினை என யூகிக்க முடியாத அளவுக்கு சஸ்பென்ஸ் காப்பாற்றப்படுகிறது. இசையமைப்பாளர் தினாவின் தம்பி ஹரிஜி பாடல்களில் பழைய நெடிஅடிக்கிறது. பின்னணி இசை பெரிய பலமாகப் படத்தைத் தூக்கிநிறுத்துகிறது.