கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த மம்தா பானர்ஜியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் கட்சியின் தலைவருமனவர் மம்தா பானர்ஜி. இவர் நந்திகிராமம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மம்தா பானர்ஜி பிரசாரத்தை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வந்து யாருடைய பாதுகாப்பும் இல்லாமல் காரின் அருகே தனியாக நின்று கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தை நன்றாக பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் அவரின் அருகில் சென்று அவரது காரின் முன்பக்க கதவை வேகமாக தள்ளியுள்ளனர்.
இதனால் மம்தாவின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வலி தாங்க முடியாமல் காரில் ஏற முயன்றபோது அந்த நபர்கள் அவரை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மம்தாவை தூக்கி காரில் உட்கார வைத்து கொல்கத்தா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து மம்தாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது இடது காலிலும் இடுப்பிலும் காயம் ஏற்பட்டிருப்பதால் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கபட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அம்மாநில ஆளுநர் மம்தாவிடம் முதலில் போனில் தொடர்புகொண்டு பேசிவிட்டு அதன்பின் நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலானது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று மம்தா கூறியுள்ளதால் அவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.