தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதி எந்த தயக்கமும் இன்றி பிற நடிகர்களுடன் இணைந்து நடித்துவருகிறார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றோர் படங்களில் வில்லனாக வந்தார். இதற்கிடையில் அவருக்கு தெலுங்கு, மலையாளம், இந்தி பட வாய்ப்புகளும் வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன் போன்ற படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைக்கு வந்துள்ளது.
இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அத்துடன் இந்தியில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேரி கிறிஸ்துமஸ், மும்பைக்கார் ஆகிய மேலும் 2 இந்தி திரைப்படங்களும் அவர் கைவசம் இருக்கிறது. அதுமட்டுமின்றி தெலுங்கில் மைக்கேல் திரைப்படத்தில் அவர் நடித்துவருகிறார்.
இந்நிலையில் அடுத்ததாக புதுப்படம் ஒன்றில் மம்முட்டி மற்றும் விஜய்சேதுபதி சேர்ந்து நடிக்கயிருப்பதாகவும், அதனை மணிகண்டன் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களை மணிகண்டன் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.