உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போயுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது அறையில் வேலை இருப்பதாக பெண் ஆசிரியரை அழைத்த பள்ளி இயக்குநர், அவருக்கு குடிக்க மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்திருக்கிறார். அதை குடித்த பின் மயக்க நிலைக்கு சென்ற ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, இந்த வீடியோவை காட்டி மிரட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆசிரியை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஆசிரியை காணாமல் போனதற்கும் பள்ளி இயக்குநருக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு காணாமல் போன இளம்பெண்ணை தேட தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.